விழுப்புரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாயமான டெல்லி வாலிபரை தேடும் பணி தீவிரம்
விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாயமான டெல்லி வாலிபரை 4-வது நாளாக தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்,
டெல்லி பட்டேல் நகரை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த இடத்தில் அங்கு சாலை விபத்தை ஏற்படுத்தியதாக அவரை புதுச்சேரி மாநில போலீசார் கைது செய்து அங்குள்ள காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பின்னர் 3 மாதம் கழித்து புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்த அவர் விழுப்புரம் வந்து வடமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிலருடன் தங்கியிருந்துள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெளிமாநிலத்தவரின் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அவர் கடந்த 6-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறையினரால் மறுநாள் (7-ந்தேதி) இரவு விடுவிக்கப்பட்டார்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் வந்த பரிசோதனை அறிக்கையில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவர் தங்கியிருந்த இடத்திற்கு சுகாதாரத்துறையினர் சென்றபோது அங்கு அந்த வாலிபர் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் அந்த வாலிபர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அவரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். கடந்த 3 நாட்களாக தேடுதல் பணி நடந்தும் அந்த வாலிபர் கிடைக்கவில்லை.
மாயமான டெல்லி வாலிபருக்கு உரிய சிகிச்சை இல்லாததால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய அதிகம் வாய்ப்புள்ளது. அதோடு கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைய நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரைகள், சத்தாண உணவு கிடைக்காவிட்டால் அவர் மேலும் நோய் தாக்கத்திற்கு ஆளாகி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். அதோடு அவருடன் பழகி வருபவர்களுக்கும் இந்நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் அவரை எப்படியாவது தேடி கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்க்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக கூடுதலாக 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 10 தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களிலும் அங்குள்ள போலீசாரின் உதவியுடன் 4-வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப் பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் உணவின்றி இருக்க முடியாது என்பதால் எந்தெந்த பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்பதையும் போலீசார் கண்டறிந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த வாலிபர், தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.1,000 பெற்றுக்கொண்டு சென்னைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி அவரை பிடிக்க சென்னைக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும், விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story