கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் அரைகுறையாக நிற்கும் கட்டுமான பணிகள் - சாலை அமைக்கும் வேலைகளும் முடங்கின
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளன.
தேனி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மனிதர்களை நேரடியாக பாதிப்பதோடு, மறைமுகமாக பல்வேறு தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுமான பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால், தேனி மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டு உள்ளன. தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு கிட்டங்கி கட்டுவதற்கு முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, கம்பிகள் கட்டப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. முதன்மை கல்வி அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. பெரும் அளவில் பணிகள் நடந்து முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகளும் அரைகுறையாக நிறுத்தப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் கட்டுமான தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
அத்துடன் சாலை அமைக்கும் பணிகள், சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் போன்றவையும் முடங்கி உள்ளன. தேனி பங்களாமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு சாலையோரம் பள்ளங்கள் தோண்டிய நிலையில் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், சாலை அமைக்கும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
Related Tags :
Next Story