நாமக்கல்லில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிசீட்டு இல்லாமல் வந்த பொதுமக்களை எச்சரித்த போலீசார்


நாமக்கல்லில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிசீட்டு இல்லாமல் வந்த பொதுமக்களை எச்சரித்த போலீசார்
x
தினத்தந்தி 12 April 2020 1:21 PM IST (Updated: 12 April 2020 1:21 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் அனுமதி சீட்டு இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வீட்டினை விட்டு வெளியே வருவதினை முறைப்படுத்தும் நோக்கத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் கடந்த 9-ந் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டன.

அதன்படி அனைத்து வீடுகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல அனுமதி சீட்டு 3 வண்ணங்களில் வழங்கப்பட்டு உள்ளது. பச்சை வண்ண சீட்டு உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளிலும், நீல நிற சீட்டு உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், ரோஸ் வண்ண சீட்டு உள்ளவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா? என போலீசார் அவ்வப்போது வாகன சோதனை செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நாமக்கல்-திருச்சி சாலையில் சோதனை மேற்கொண்ட போலீசார் அனுமதி சீட்டு இல்லாமல் வெளியே வந்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலர் தங்களுக்கு இன்னும் அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

Next Story