தேன்கனிக்கோட்டை அருகே ஒரு வாரமாக உயிருக்கு போராடி வரும் யானை - காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி
தேன்கனிக்கோட்டை அருகே ஒரு வாரமாக உயிருக்கு போராடும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சுற்றிய 15 வயது ஆண் யானை காட்டுசீகலஅள்ளி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதில் யானையின் இடது புற பின்னங்கால் முறிந்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். காலில் முறிவு ஏற்பட்டதால் நடக்க முடியாமல் இந்த யானை கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் கடந்த 4-ந் தேதி தஞ்சம் அடைந்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் வலி நீங்க ஊசி போட்டும், மருந்துகளும் கொடுத்தனர்.
பின்னர் யானையை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதிக்கு உட்பட்ட கோவைப்பள்ளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அன்று முதல் அந்த யானை படுத்த படுக்கையாக கிடக்கிறது. அதற்கு குளுக்கோஸ் ஏற்றிய வனத்துறையினர் உணவு வகைகளை போட்டும் யானை சாப்பிடாமல் அப்படியே இருக்கிறது. அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வன ஊழியர்கள் அருகிலேயே கூடாரம் அமைத்து, அங்கேயே தங்கி 24 மணி நேரமும் யானையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், மாவட்ட கால்நடை டாக்டர் பிரகாஷ், வனவர் கதிரவன் மற்றும் வனத்துறையினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் யானை கவலைக்கிடமாக உள்ளதால் அதை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறோம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story