புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
புதுவை மாநிலத்தில் முதல் பலியாக மாகியில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறந்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகியில் மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாகி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தநிலையில் 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் செம்மேடு பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதியவரின் பலியை தொடர்ந்து மாகி பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த முதியவரின் குடும்பத்தினர் ஏற்கனவே சோதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தொற்று ஏதும் இல்லை. புதுவை மாநிலத்தில் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதில் மூதாட்டி ஒருவர் மட்டுமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
தற்போது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது புதுவை மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் முதல் பலி ஆகும். மீதமுள்ள 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story