ரெயில் நிலையம் அருகே மதுபானம் விற்ற 6 பேர் கைது
புதுவை ரெயில் நிலையம் அருகே மதுபானம் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மதுக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான கடைகள், சாராய கடைகள் மூடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் திருட்டுத்தனமாக மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இதை தடுக்க கலால்துறை சார்பில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அதேபோல் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை ரெயில் நிலையம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டவுடன் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 6 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 610 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த இருதயநாதன் பாபு (வயது 44), உத்திரவாகிணி பேட்டையை சேர்ந்த அருண் (30), கவிதென்றல் (24), ஜனார்த்தனன் (34), புவியரசன் (23), பெரியபேட்டை பாஸ்கர் (37) என்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் கலால் துறை துணை ஆணையர் தயாளனிடம் ஒப்படைத்தனர்.
கைதானவர்களிடம் விசாரித்ததில் புதுவை அண்ணா சாலையில் உள்ள மதுபான கடை ஒன்றில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுக்கடையின் உரிமத்தை ரத்து செய்து கலால்துறை துணை ஆணையர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story