செங்கோட்டையில் இறந்த தந்தை உடலை பார்க்க அனுமதி கிடைக்காமல் நெல்லையில் தவித்த மாற்றுத்திறனாளி பெண்


செங்கோட்டையில் இறந்த தந்தை உடலை பார்க்க அனுமதி கிடைக்காமல் நெல்லையில் தவித்த மாற்றுத்திறனாளி பெண்
x
தினத்தந்தி 13 April 2020 4:15 AM IST (Updated: 13 April 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் இறந்த தனது தந்தையின் உடலை பார்க்க அனுமதி கிடைக்காமல் நெல்லையில் மாற்றுத்திறனாளி பெண் தவித்தார். அவரை சிறப்பு ஏற்பாட்டில் கலெக்டர் ஷில்பா ஊருக்கு அனுப்பி வைத்தார்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன் (வயது 27). பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விக்னேசுவரி (27). இந்த தம்பதிக்கு வாய் பேச முடியாது, காது கேட்கும் திறனும் கிடையாது. கொரோனா பீதி மற்றும் விடுமுறையையொட்டி இந்த மாற்றுத்திறனாளி தம்பதி சொந்த ஊரான கே.டி.சி. நகருக்கு திரும்பி வந்தனர்.

இந்த நிலையில் விக்னேசுவரியின் தந்தை செண்பகம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று உடல் நலக்குறைவால் திடீரென்று இறந்தார்.

இதனால் அவரது உடலை பார்க்கவும், இறுதி சடங்கில் பங்கேற்கவும் விக்னேசுவரி தம்பதி புறப்பட்டனர். ஆனால் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால், மாற்று ஏற்பாடாக கார் மூலம் செல்ல உறவினர் கள் ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து ஏதேனும் ஒரு காரில் செல்லும் வகையில் அனுமதி பெறுவதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்காமல் தவித்தார்கள்.

மதியம் இந்த தம்பதி சமூக ஆர்வலர்கள் உதவியுடன், மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து தங்களது நிலைமையை எடுத்துக் கூறினர்.

இதையடுத்து அவர், கலெக்டர் ஷில்பாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த மாற்றுத்திறனாளி தம்பதிக்கு சிறப்பு ஏற்பாடாக ஒரு காரில் உரிய அனுமதியுடன் அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் ஷில்பா நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பிற்பகலில் இந்த தம்பதி காரில் செங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அந்த பெண், மாவட்ட நிர்வாகத்துக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த தம்பதி செங்கோட்டைக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தவறாக விண்ணப்பித்து விட்டனர். இதனால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. பின்னர் நேரடியாக வந்த அவர்களது கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, செங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்“ என்று தெரிவித்தனர்.

தந்தை இறந்த தகவல் கிடைத்தும் அவரது உடலை பார்க்க செல்ல முடியாமல் மகள் அவதிப்பட்டதும், அதனை பிறரிடம் எடுத்துக் கூற முடியாமல் சிரமப்பட்டதும் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Next Story