கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
பெருந்துறை,
தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி கொரோனா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அவருடைய 32 வயது கர்ப்பிணி மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு நேற்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story