அண்ணா மேம்பாலம் அருகே விபத்து: டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய பாமாயில் - பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்


அண்ணா மேம்பாலம் அருகே விபத்து: டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய பாமாயில் - பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 13 April 2020 4:02 AM IST (Updated: 13 April 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்து கொட்டிய பாமாயிலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.

சென்னை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நோக்கி டேங்கர் லாரி ஒன்று நேற்று மதியம் புறப்பட்டது. லாரியில் சுமார் 24 டன் அளவிலான பாமாயில் கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் ஏறி கீழே இறங்கியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் சாலை தடுப்பில் லாரியின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன.

இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து அதில் இருந்த பாமாயில் சாலையில் கொட்டி அருகே இருந்த தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் குடங்களையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் கொண்டு வந்து பாமாயிலை பிடிக்க தொடங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தேனாம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணியில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். முதற்கட்டமாக தீப்பற்றாமல் இருக்க லாரியில் இருந்த ‘பேட்டரி’ அகற்றப்பட்டது. டீசல் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து டீசல் டேங்கில் ரசாயன நுரை பீய்ச்சியடிக்கப்பட்டது. பின்னர் சாலையில் ஆங்காங்கே தேங்கியிருந்த பாமாயிலை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழாமல் இருக்க உமியும், மணலும் கொட்டப்பட்டன. இந்த விபத்தில் லேசான காயத்துடன் டிரைவர் முருகன் உயிர் தப்பினார்.

பின்னர் ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சாலையில் கொட்டிய பாமாயிலை பயன்படுத்த வேண்டாம் என்று தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டனர். இதனை பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் பாமாயிலை பாத்திரங்களில் எடுத்துச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story