விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய 112 பேருக்கு கொரோனா இல்லை


விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய 112 பேருக்கு கொரோனா இல்லை
x
தினத்தந்தி 12 April 2020 11:15 PM GMT (Updated: 12 April 2020 10:58 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 112 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு 11 பேர் மதுரையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 10 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். மாவட்டம் முழுவதும் டெல்லி சென்று திரும்பியவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்களும் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் அதிகமுள்ள பகுதிகள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1948 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 112 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லையென மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து 17 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்று(திங்கட்கிழமை) வெளியாகுமென சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story