கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக அரசு நிதி திரட்ட பட்னாவிஸ் யோசனை
கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக அரசு நிதி திரட்ட வேண்டும்என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் யோசனை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கு தேவையான மருத்துவ உபரணங்களை வாங்குவதற்கு பணம் திரட்ட எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசுக்கு யோசனை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பணம் ஒரு காரணமாக இருக்க கூடாது. மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) வங்கி கணக்குகளில் அதிக வைப்பு தொகை உள்ளன.
அந்த பணத்தை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்த நிதியின் மூலம் அதிகளவில் பரிசோதனை கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற தேவையான உபகரணங்களை வாங்க அரசு பயன்படுத்தலாம்.
சில மாதங்களுக்கு பிறகு பொருளாதாரம் மீள தொடங்கியதும் கடன் வாங்கிய அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியும். ஊரடங்கின் போது மக்களை வீட்டுக்குள் வைத்திருக்க மாநில ரிசர்வ் போலீஸ் படையை திறம்பட பயன்படுத்த முடியும். சில நேரங்களில் அரசு கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
சமூகத்தின் பெரிய நலனுக்காக இந்த கண்டிப்பு அவசியம். மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு உணவு தானியங்களின் ஒழுங்கற்ற விற்பனை மற்றும் பற்றாக்குறை குறித்த பயம் தான் காரணம். எனவே உணவு தானியங்களை மக்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் சுழற்சி முறையில் வழங்குவதற்கு அரசு சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது அனைவருக்கும் உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும். உணவு தானிய பதுக்கலுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story