சிக்பள்ளாப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தில் 4 பேர் குணமாகி வீடு திரும்பினர்
சிக்பள்ளாப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தில் 4 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். முன்னதாக கைகள் தட்டியும், பூச்செடி, பழங்கள் வழங்கியும் மருத்துவ ஊழியர்கள், அவர்களை வழியனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிக்பள்ளாப்பூர்,
கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 70 வயது முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். இவரது மகன், மருமகள், 2 மருமகன் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர்கள் சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் குணமாகினர். இதைதொடர்ந்து நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். முன்னதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் கைகளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு பூச்செடிகள், பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
கைகள் கூப்பி நன்றி
அப்போது 4 பேரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கைகளை கூப்பி நன்றி தெரிவித்தப்படி கண்கலங்கியபடி சென்றனர். இது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்து குணமடைந்து 4 பேர் வீடு திரும்பினர். நேற்றும் ஒரே குடும்பத்தில் 4 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை 8 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 பேருக்கு சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலில் விழுந்து வணங்கினார்
இதுபோல் பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபரும் கொரோனா பாதிக்கப்பட்டு பெங்களூரு கே.சி. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கைத்தட்டியும், பூக்கள் கொடுத்தும் வழியனுப்பினர். அப்போது கண்கலங்கிய வாலிபர், சிகிச்சை அளித்த டாக்டர், செவிலியர்களின் கால்களில் விழுந்து வணங்கி கண்கலங்கிய படி வீட்டுக்கு திரும்பினார்.
Related Tags :
Next Story