ஆம்பூரில் வங்கிகள் இயங்காது வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும் - பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
ஆம்பூரில் வங்கிகள் இயங்காது என்றும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வீடுகளுக்கே கொண்டுசென்று வழங்கப்படும், எனவே யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.
ஆம்பூர்,
ஆம்பூர் வர்த்தக மையத்தில் அனைத்து அத்தியாவசிய அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ம.ப. சிவன்அருள் தலைமையில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், பொறியாளர் எல். குமார், வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறி, மளிகை, பழம், பால் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நகரம் முழுவதும் பல்வேறு பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் குறித்து அறிந்து அவற்றை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் ம.ப.சிவன்அருள் கூறியதாவது:-
ஆம்பூர் நகரில் மட்டும் வங்கிகள் இயங்காது. அந்தந்த பகுதிகளில் இயங்கும் ஏ.டி.எம். மையங்கள் மூலம் பொதுமக்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படும்.
பொதுமக்கள் எந்த பொருள் வங்குவதற்காகவும் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. பொதுமக்கள் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஆம்பூர் பகுதி பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து கொரோனா தொற்று இல்லாத நகரமாக மாற்றிட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story