தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை முதல் மூடல் - கலெக்டர் தகவல்


தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை முதல் மூடல் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 April 2020 11:00 PM GMT (Updated: 13 April 2020 2:16 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் உள்பட அனைத்தும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்காலிக சந்தைகள் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்கள் வாகனம், தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளில் நேரடியாக சென்று வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வங்கி ஏ.டி.எம்.கள், எரிவாயு முகவர்கள், இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி, வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தாசில்தார்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Next Story