தேவாலயங்களில் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை


தேவாலயங்களில் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை
x
தினத்தந்தி 13 April 2020 4:30 AM IST (Updated: 13 April 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி ஈஸ்டர் பண்டிகையான நேற்று தேவாலயங்கள் கிறிஸ்தவர்கள் இன்றி களையிழந்து காணப்பட்டது.

கடலூர்,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து 3-வது நாளில் உயிர்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதன்படி ஈஸ்டர் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் வீடுகளில் இருந்தபடி ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். கடலூரில் கார்மேல் அன்னை ஆலயம், தூய எபிபெனி ஆலயம், சாமிப்பிள்ளைநகர் தூய இடைவிடா அன்னை ஆலயம் போன்ற அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் கிறிஸ்தவர்கள் இன்றி தேவாலயங்கள் களையிழந்து காணப்பட்டது. இருப்பினும் கடலூரில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் ஈஸ்டரை முன்னிட்டும், கொரோனா வைரசிலிருந்து மக்களை விடுவிக்கவும், போதகர் ஸ்பர்ஜன் மாபி ஈஸ்டர் நற்செய்தி கூறி திருப்பலி நடத்தினார். மேலும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாததால் திருச்சபை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, வடலூர் பகுதிகளில் உள்ள தேவாலயங் களில் பிரார்த்தனைகள் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவால் மக்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட ஆலயங்களில் பங்குத்தந்தைகள் மட்டும் பிரார்த்தனை செய்தனர். அதன்படி வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள மிக பழமைவாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்குத் தந்தை லூர்து ஜெயசீலன், உதவி பங்குத்தந்தை ஆண்டோ மரியசூசை ஆகியோர் மட்டும் பிரார்த்தனை செய்தனர்.

Next Story