கரூர் மாவட்டத்தில் 3 பெண்களுக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 25-ஆக உயர்வு
கரூர் மாவட்டத்தில் 3 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் குளித்தலையை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் உள்பட 22 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ரத்தபரிசோதனை அறிக்கையின்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்தார். அவர்கள் 3 பேரும், 37, 21, 54 வயதுடைய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் புகளூரையும், மற்ற இருவர் பசுபதிபாளையத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் வசிப்பிடத்தையும், வீதிகளையும் சுற்றி, கொரோனா பாதிப்பு பகுதி என பதாகை வைத்தும், இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்தும் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வீதிகளை சேர்ந்தவர்கள் வெளியில் வராத வகையிலும், வெளிநபர்கள் யாரும் அந்த வீதிகளுக்கு சென்று விடாதபடியும் போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த வீதிகளை சேர்ந்தவர்களுக்கு உணவுபொருள், காய்கறி, பால், மருந்து ஆகியவை ஆர்டரின் பேரில் போன் மூலம் வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த வீதிகளை சேர்ந்தவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதும் உள்ளதா? என மருத்துவக்குழுவினர் கண்காணித்து கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையில் கரூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story