திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் - 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 39 பேரும், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 42 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்புடைய 165 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 103 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
மேலும் சிலருக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. மாவட்டம் முழுவதும் 30 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், தனது குடும்பத்தினரை பரிசோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என வலியுறுத்தி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து தனது முக கவசத்தை கழட்டி வீசியதோடு டாக்டர்கள் மீது எச்சில் துப்பியுள்ளார். இதேபோல் கொரோனா வார்டில் உள்ள மேலும் ஒருவரும் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் தங்களுக்கு தொற்று ஏற்படும் வகையில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய 2 பேர் மீதும் அரசு மருத்துவமனை போலீசார் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொரோனா வைரசை பரப்ப முயற்சித்தல், கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் 2 பேர் மீது திருச்சியில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story