பெரம்பலூரில், சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


பெரம்பலூரில், சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 April 2020 10:06 AM IST (Updated: 13 April 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அறிவித்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. நகர்பகுதியில் இறைச்சி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், வாடிக்கையாளர் கேட்கும் இறைச்சியை, அவர்கள் வீடுகளில் கொண்டு கொடுக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் கூறியிருந்தார். ஆனாலும் நேற்று நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் திறந்திருந்தன. 

அந்த கடைகள் முன்பு இறைச்சி வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்றனர். மேலும் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டின் வெளியே தரையில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது திறந்திருந்து வியாபாரம் செய்த இறைச்சி கடைகளை அடைக்க உத்தரவிட்டார். 

தரை கடைகளையும் அப்புறப்படுத்தினார். மேலும் சாலையோரம் இறைச்சி வைத்து வியாபாரம் செய்த தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பெரம்பலூர் மாவட்டத்திலும் அனுமதி சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story