நாகர்கோவிலில், மேலும் ஒரு ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைப்பு - அலாரம் ஒலித்ததால் பரபரப்பு


நாகர்கோவிலில், மேலும் ஒரு ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைப்பு - அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 April 2020 2:47 PM IST (Updated: 13 April 2020 2:47 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மேலும் ஒரு ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அங்கு அபாய அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள மருந்துக்கடை மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் கண்ணாடியும் உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கு சென்று விசாரணை நடத்திய கோட்டார் போலீசார் தெரிவிக்கும் போது, மனநலம் பாதிக்கப்பட்டவர் கண்ணாடிகளை உடைத்து இருக்கலாம் என்று கூறினார்கள்.

இந்தநிலையில் கேப்ரோட்டில் உள்ள மேலும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியும் நேற்று அதிகாலை உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த மையம், அண்ணா பஸ் நிலையத்தின் அருகில் உள்ளது. முன்பு இந்த பகுதியில் எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் கல் வீசி ஏ.டி.எம். மைய கண்ணாடியை உடைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் இருந்து அபாய அலாரம் ஒலிக்க தொடங்கியுள்ளது. உடனே அக்கம், பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதுபற்றி தகவல் அறிந்ததும், கோட்டார் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றால் தான் அபாய அலாரம் ஒலிக்கும். எனவே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story