ஊரடங்கால் மூடப்பட்ட தேவாலயங்கள்: வீடுகளில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய கிறிஸ்தவர்கள் - மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை


ஊரடங்கால் மூடப்பட்ட தேவாலயங்கள்: வீடுகளில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய கிறிஸ்தவர்கள் - மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை
x
தினத்தந்தி 13 April 2020 2:47 PM IST (Updated: 13 April 2020 2:47 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக தேவாலயங்கள் மூடப்பட்ட நிலையில், நேற்று ஈஸ்டர் பண்டிகையை அவரவர் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

முருகபவனம்,

இயேசு கிறிஸ்து புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டார். அதன்பின்னர் 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இந்த நாளையே உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவாக (ஈஸ்டர் பண்டிகை) கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

திண்டுக்கல் மறைமாவட்டத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறும். அப்போது பாஸ்கா திரி ஏற்றி புகழ் உரையை நினைவு கூறுதல், இறைவார்த்தை வழிபாடு, மெழுகுவர்த்திகளை ஏற்றி திருமுழுக்கு வாக்குறுதியை புதுப்பித்தல், நற்கருணை திருவிருந்து உள்ளிட்ட திருச்சடங்குகள் நடக்கும்.

அதேபோல் மறை மாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் அந்தந்த பங்கு தந்தையர்கள் தலைமையில் மேற்கண்ட அனைத்து திருச்சடங்குகளும், இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவின் போது நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதேபோல் திண்டுக்கல்லில் புனித வளனார், தூய பவுல், வியாகுல அன்னை உள்ளிட்ட தேவாலயங்களும் மூடப்பட்டன.

தேவாலயங்கள் மூடப்பட்டதால் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி நேற்று தனது வீட்டிலும், அந்தந்த பங்கு தந்தையர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளிலும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, ஜெப வழிபாடு மற்றும் திருச்சடங்குகளை செய்தனர்.

திண்டுக்கல்லில் ஆயரின், வழிகாட்டுதல்படி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே அனைத்து திருச்சடங்குகளையும் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இதுதவிர ஒருசிலர் தேவாலயங்களின் வெளியே மெழுகுவர்த்தி ஏற்றி ஜெப வழிபாடு செய்தனர். 

Next Story