விளாத்திகுளம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
விளாத்திகுளம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்குவது என்று கோவில்பட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை வருகிற 30-ந்தேதி வரையிலும் தமிழக அரசு நீட்டித்து உள்ளது. மேலும் நாட்டுப்படகு மீனவர்களை சுழற்சி முறையில் கடலில் மீன்பிடிக்க செல்லவும் அனுமதித்து உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பீர் முகைதீன், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் மரிய பிரின்சோ வயலா மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள வேம்பார், பெரியசாமிபுரம், கீழ வைப்பார், சிப்பிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தருவைக்குளம், பட்டினமருதூர், வெள்ளப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டும்.
பாரம்பரிய முறைப்படி, 10 எச்.பி. மற்றும் அதற்கு குறைவான திறனுடைய மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டும். கடலில் மீன்பிடித்து விட்டு படகுகள் தனித்தனியாக கரைக்கு வர வேண்டும். ஏலக்கூடங்களில் மீன்களை விற்பனை செய்யாமல், மொத்தமாக வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் குழு அமைத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதை கண்காணிப்பது, விதிகளை மீறும் மீனவர்கள் மீது மீன்வளத்துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு மீன்பிடிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story