பேக்கரிகளை திறக்க அனுமதி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பேக்கரிகளை திறக்க அனுமதி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 14 April 2020 4:15 AM IST (Updated: 13 April 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பேக்கரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி, 

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, லாரி ஓட்டுனர்கள், ஏற்றுமதி சார்ந்த பணியாளர்கள், தினக்கூலிகள் மற்றும் நோயாளிகள் போன்ற பொதுமக்களின் உணவுத்தேவையை கருத்தில் கொண்டும், பிரட், பன், பிஸ்கட், ரஸ்க் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காகவும், பேக்கரிகளை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பேக்கரியின் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும். பணியாளர்களை அழைத்துச்செல்லும் வாகனத்துக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும். பேக்கரியின் பணியாளர்கள் முககவசம் அணிய வேண்டும். கையுறை, தலைமுடி கவசம் ஆகியவற்றை கண்டிப்பாக அணிய வேண்டும்.

பணியாளர்கள் பேக்கரிக்குள் செல்லும் முன்பும், பேக்கரியை விட்டு வெளியே செல்லும் போதும் மட்டுமில்லாமல், மற்ற நேரங்களிலும் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும். பணியாளர்களுக்கிடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். பணியாளர் யாருக்கேனும், சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட வேண்டும். அவரை பேக்கரியில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது.

பேக்கரிக்கு வருகை தரும் நுகர்வோர்களையும், சமூக இடைவெளி பின்பற்ற செய்ய வேண்டும். பேக்கரியில் நுகர்வோர் யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது. பேக்கரியில் பிரட், பன், ரஸ்க், பிஸ்கட் போன்றவற்றுடன் இதர தின்பண்டங்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம். பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பேக்கரிகள் இயங்குவதற்கான அனுமதி நேரத்தை தமிழக அரசு பின்வரும் நாட்களில் மாற்றியமைக்கும் பட்சத்தில், பேக்கரி உரிமையாளர்கள் அரசால் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே செயல்பட வேண்டும். பேக்கரிகளில் டீ, காபி போன்றவை விற்பனை செய்யக்கூடாது.

எனவே, பேக்கரி உரிமையாளர்கள், மேற்கூறிய நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பேக்கரிகளை திறந்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவுப்பொருட்கள் தரமானதாகவும், போதிய அளவிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story