வீட்டைவிட்டு வெளியே வரும் போது முககவசம் அணிவது கட்டாயம் - கலெக்டர் அதிரடி உத்தரவு


வீட்டைவிட்டு வெளியே வரும் போது முககவசம் அணிவது கட்டாயம் - கலெக்டர் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 14 April 2020 4:15 AM IST (Updated: 14 April 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு சந்தைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள், இறைச்சி கடைகளில் கூடும் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் இனியும் இதுபோன்ற நிலை தொடராத வகையில் கடை உரிமையாளர்கள் தங்களது கடைக்கு வரும் பொதுமக்களிடையே போதிய சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கேற்ப கடைகளின் முன்பு தகுந்த ஏற்பாடுகளை தவறாமல் செய்ய வேண்டும். அவ்வாறு சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது பேரிடர் மேலாண்மை 2005 சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும்.

மேலும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். வெளியே வரும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோய் தொற்று பரவாமல் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story