டிரான்ஸ்பார்மரில் சிக்குவதால் மின்தடை; சிறுவர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் - மின்வாரியம் அறிவுறுத்தல்
சிறுவர்கள் விடும் பட்டம் டிரான்ஸ்பார்மரில் சிக்குவதால் மின்தடை ஏற்படுவதால், பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் நோய் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிர் பலியும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். வேலை, படிப்பு என கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றியவர்களை எல்லாம் வீட்டிலேயே முடங்கி கிடக்க செய்து விட்டது.
ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதாது என்று சொல்லியவர்கள் எல்லாம் இன்று இருக்கும் நேரத்தை எப்படி கழிப்பது என தெரியாமல் திணறி வருகின்றனர். பெரியவர்கள் பல்லாங்குழி, கேரம், தாயம் என பொழுதுபோக்கினாலும் சிறுவர்கள் நேரம் போகாமல் தவித்து வருகின்றனர். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டாலும் விடுமுறையை கொண்டாட முடியாமல் வெளியே வந்து விளையாட வழியின்றி தவித்த அவர்களுக்கு வீட்டு மொட்டை மாடிகள் தற்போது விளையாட்டு களமாக அமைந்துவிட்டது. இதனால் அவர்கள் மாலை நேரங்களில் மொட்டை மாடிகளுக்கு சென்று பட்டம் விடுகின்றனர்.
செல்போன்களிலும், வீடியோ கேம்களிலும் மூழ்கியிருந்த இவர்களுக்கு பட்டம் விடுதல் புது அனுபவத்தை தந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ்பார்மரில் பட்டம் சிக்கி கொள்வதால் மின்தடை ஏற்பட்டு மின்வாரியத்தின் பணிகளில் தடையில்லா மின்சாரம் என்பதில் தடங்கல் ஏற்படும் நிலையும் சில இடங்களில் உருவாகி உள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மின்வாரியம் சார்பில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுவர்கள் பட்டம்(காற்றாடி) பறக்கவிட்டு விளையாடி வருகின்றனர். இந்த பட்டம் அறுந்து மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களில் சிக்கி கொள்வதால் மின்தடை ஏற்படுகிறது. மேலும் இந்த செயல் மின்விபத்திற்கு வழி வகுக்கும்.
மேலும் இந்த மின்தடையை சரி செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதோடு, தடையற்ற மின்சாரம் வழங்கும் பணிகள் தடைபடுகிறது. எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பட்டம் விடுவது ஆபத்தை விளைவிக்கும் என்பதை எடுத்துரைத்து அதை பறக்க விடுவதை தவிர்க்க வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story