திருப்பரங்குன்றம் அருகே கொரோனா தனி சிறப்பு மையத்தில் இருந்து ஒரே நாளில் 27 பேர் வீடு திரும்பினர் - 8 பேருக்கு தொடர் சிகிச்சை


திருப்பரங்குன்றம் அருகே கொரோனா தனி சிறப்பு மையத்தில் இருந்து ஒரே நாளில் 27 பேர் வீடு திரும்பினர் - 8 பேருக்கு தொடர் சிகிச்சை
x
தினத்தந்தி 13 April 2020 10:30 PM GMT (Updated: 13 April 2020 10:04 PM GMT)

திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொரோனா தனி சிறப்பு மையத்திலிருந்து தொற்று இல்லாத 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 8 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சியில் உள்ள ஆஸ்டின்பட்டி அரசு நுரையீரல் மருத்துவமனையில் 90 படுக்கைகள் கொண்ட கொரோனா தடுப்பு தற்காலிக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனிமைப்படுத்தும் பிரிவு என்று தனித்தனியாக 5 படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு என்று 85 படுக்கைகள் போடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தனி சிறப்பு மையத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பியவர்கள் 34 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதற்கட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 27 பேரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வீட்டில் தனித்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதோடு சுகாதார துறையினர் மூலம் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் 34 பேரில் 27 பேர் வீட்டுக்கு சென்றதையடுத்து மீதி உள்ள 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவு வராததால் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதே மருத்துவமனையின் சிறப்பு வார்டில்நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

கொரோனா சிறப்பு மையத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 35 பேர்களில் 27 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 8 பேர் மட்டும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story