திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வது எப்படி? - கலெக்டர் விளக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வது எப்படி? என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
கொரோனா வைரசை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள், போதுமான அளவு கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக காய்கறி மற்றும் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனுக் காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருவள்ளூரில் 12 ஆயிரத்து 291 ஹெக்டேர் பரப்பில் பழங்களும், 4 ஆயிரத்து 485 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெரும்பாலான காய்கறிகளும், பழங்களும் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை, உதவி இயக்குனர் அலுவலகத்தை அல்லது துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
நடவடிக்கை எடுத்துள்ளது
இதுதொடர்பாக விவசாயிகளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை வழங்குமாறு மேற்கண்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காய்கறிகள் விற்பனையை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களை இயக்கவும், நுகர்வோருக்கு அருகிலேயே நேரடியாக நியாயமான விலையில் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உதவிட வேண்டும்
விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகி, தேவையான உதவிகளை பெறலாம்.
தமிழ்நாடு அரசு மற்றும் தோட்டக்கலைத்துறை மேற்கொண்டுள்ள இத்தகைய வாய்ப்பினை அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் எவ்வித தடையுமின்றி கிடைத்திட உதவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story