மும்பையில் கொரோனாவுக்கு 1,600 பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு - முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்


மும்பையில் கொரோனாவுக்கு 1,600 பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு - முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்
x
தினத்தந்தி 14 April 2020 5:07 AM IST (Updated: 14 April 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொரோனாவுக்கு 1,600 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

மும்பை,

நாட்டின் நிதி தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவத்தை காட்டி வருகிறது.

மும்பையில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இங்கு நாள்தோறும் சராசரியாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மும்பையில் 242 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,600-ஐ கடந்து இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இதேபோல மும்பையில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் பலியான தகவல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல நேற்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 43 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மும்பையில் மொத்தம் 141 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

தாராவி

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக இங்கு இதுவரை நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் தாராவியில் 6 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

இதில் குறிப்பாக 5 பேர் பாலிகாநகரையும், 9 பேர் முகுந்த் நகரையும், 5 பேர் ஜனதா சொசைட்டியையும், 5 பேர் முஸ்லிம் நகரையும், 6 பேர் சோசியல் நகரையும், 4 பேர் சாஸ்திரி நகரையும் சேர்ந்தவர்கள். இதுதவிர வைபவ் கட்டிடம், மதினாநகர், கல்யாணவாடியை சேர்ந்த தலா 2 பேரும், தன்வாடா சால், பி.எம்.ஜி.பி. காலனி, முருகன்சால், ராஜூவ் காந்தி சால், நேருசால், இந்திராசால், குல்மோகர் சால் பகுதியை சேர்ந்தவர்களும் கொரானாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் நேரு சாலையை சேர்ந்த 60 வயது நபர் உயிரிழந்து உள்ளார். இதன் மூலம் தாராவியில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

முக கவசம்

இதற்கிடையே மும்பையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவதை மாநகராட்சி கட்டாயமாக்கி உத்தரவிட்டது. முககவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரசின் ஆபத்தை உணராமல் அலட்சியத்துடன் பலரும் முககவசம் அணியாமல் வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. இந்தநிலையில், முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்களை பிடித்து ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இதற்கென அனைத்து வார்டுகளிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் முககவசம் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.

Next Story