கர்நாடகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 2 பேர் பலியானார்கள். இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 239-ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் வரை 226 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்த 55 வயது நபர், 36 வயது இளைஞர், 74 வயது மூதாட்டி, 37 வயது இளைஞர் ஆகிய 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேருமே ஏற்கனவே வைரஸ் தொற்று இருந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.
மண்டியா மாவட்டம் மலவள்ளியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 8 வயது சிறுமி, 18 வயது இளைஞர் ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான். பாகல்கோட்டையை சேர்ந்த 27 வயது இளைஞருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பீதரை சேர்ந்த 16 வயது சிறுமி, 35 வயது பெண் ஆகியோருக்கு வைரஸ் பரிதப்பு ஏற்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் பிரச்சினை
பெலகாவியை சேர்ந்த 20 வயது இளைஞர், 14 வயது சிறுவன், 45 வயது நபருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த 39 வயது நபருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் டெல்லி சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பெங்களூரு நகரை சேர்ந்த 62 வயது முதியவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பாதிக்கப்பட்ட 15 பேரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
இந்த நிலையில் நேற்று இரவு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் ஆவார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அதேபோல் பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக அரசு ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் நேற்று இரவு மரணம் அடைந்தார். இவர்கள் 2 பேர் மரணம் அடைந்திருப்பதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா பாதித்தவர்களில் பெங்களூருவில் 77 பேர், மைசூருவில் 48 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், உத்தர கன்னடா, சிக்பள்ளாப்பூரில் தலா 9 பேர், கலபுரகியில் 11 பேர், பல்லாரியில் 6 பேர், தாவணகெரே, உடுப்பியில் தலா 3 பேர், தார்வாரில் 6 பேர், குடகில் ஒருவர், பீதரில் 13 பேர், பாகல்கோட்டையில் 8 பேர், பெலகாவியில் 17 பேர், பெங்களூரு புறநகரில் 5 பேர், மண்டியாவில் 8 பேர், விஜயாப்புராவில் 6 பேர் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில் வைரஸ் பரவியுள்ளது.
60 பேர் குணம் அடைந்தனர்
கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 60 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தத்தில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 239 ஆக(நேற்று இரவு 2 பேர் மரணம் அடைந்தது நீங்கலாக) உயர்ந்துள்ளது. டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story