ஊரடங்கு உத்தரவால் சேலத்தில் அழுகும் நிலையில் 100 டன் தர்ப்பூசணி - வியாபாரிகள் சோகம்
ஊரடங்கு உத்தரவால் சேலத்தில் அழுகும் நிலையில் 100 டன் தர்ப்பூசணிகள் உள்ளன. இதனால் சோகம் அடைந்துள்ள வியாபாரிகள், வாகனங்கள் மூலம் பழங்களை விற்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏறக்குறைய அனைத்து தொழில்களும் முடங்கி போய் உள்ளன. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தர்ப்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்கள் விற்பனை சூடுபிடிக்கும். பலர் மாநகரில் ஆங்காங்கே தர்ப்பூசணி, முலாம்பழம் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவால் அவர்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்ப்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்களை அதிகளவு விரும்பி சாப்பிடுவதால் அதன் விலையும் உயர்ந்து காணப்படும். சேலம் சத்திரம் பகுதியில் தர்ப்பூசணி மொத்த விற்பனை கடைகள் பல உள்ளன. இங்கு விற்பனைக்காக தர்ப்பூசணி, முலாம்பழம் ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கு உத்தரவால் வியாபாரம் பாதிக்கப்பட்டு பழங்கள் அழுகும் நிலையில் உள்ளன. இதனால் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து தர்ப்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:-
திண்டிவனம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்ப்பூசணி வாங்கி வருகிறோம். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் வியாபாரம் இல்லாததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளோம். தர்ப்பூசணி கிலோ ரூ.6-க்கும், முலாம்பழம் கிலோ ரூ.7-க்கும் விற்றாலும் வாங்க ஆட்கள் கிடையாது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் தர்ப்பூசணி கிலோ ரூ.15 வரைக்கும், முலாம்பழம் கிலோ ரூ.17 வரைக்கும் விற்கப்பட்டன.
இருசக்கர வாகனங்களில் பழங்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் யாரும் வருவதில்லை. இதனால் 100 டன் வரை தர்ப்பூசணியும், 30 டன் வரை முலாம்பழமும் அழுகும் நிலையில் உள்ளன. மேலும் தினமும் மாநகராட்சி வாகனங்களில் அழகிய பழங்களை அனுப்பி வருகிறோம். தர்ப்பூசணி மற்றும் முலாம்பழங்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விற்க கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் எங்களது கடைகளை மதியம் வரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story