ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல்: இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய போலீஸ் நிலையங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை நிறுத்தும் இடமாக போலீஸ் நிலையங்கள் மாறிவிட்டன.
வேடசந்தூர்,
கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இதில் அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை கம்பிகளால் கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டுள்ளன.
இதில் வேடசந்தூர், எரியோடு, கூம்பூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே விபத்து மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், அந்தந்த போலீஸ் நிலையங்களில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்களையும் போலீஸ் நிலையங்களில் போலீசார் நிறுத்தியுள்ளனர். இதனால் போலீஸ் நிலையங்களில் உள்ள காலி இடங்கள் முழுவதும் இருசக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. சில போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லை.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீஸ் நிலையங்களில் நிறுத்தியுள்ளோம். ஆனால் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் போலீஸ் நிலையங்களில் அவற்றை நிறுத்த இடமில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதன்பிறகு அவர்களது இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story