கொரோனா நிவாரண தொகை கேட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு


கொரோனா நிவாரண தொகை கேட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2020 11:32 AM IST (Updated: 14 April 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண தொகை கேட்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பசியால் வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ளது நாகலாபுரம். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்குள்ள 50 குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். மேலும் சிலருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் நிவாரண உதவி ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள், உணவு பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தங்களுக்கு அரசின் நிவாரணதொகை, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள திடலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அழகன் என்ற முதியவரும், அவரது மனைவி அழகம்மாளும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திடீரென பசியால் மயங்கி விழுந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தண்ணீரை தெளித்து அவர்களை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் வயதான தம்பதியினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர் தானாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story