வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதால் 400 கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கிய விவசாயிகள் - ஏழை, எளிய மக்களிடம் கொடுக்க கோரிக்கை
வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் 400 கிலோ காய்கறிகளை விவசாயிகள் இலவசமாக வழங்கி, அவற்றை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
தேனி,
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். பணப்புழக்கம் இல்லாமலும் தவிக்கின்றனர். இதனிடையே சில வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் காய்கறிகளை கொள்முதல் செய்து அவற்றை பல மடங்கு கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் விற்கின்றனர். இது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது.
இந்தநிலையில் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சீனிராஜ், அன்பழகன், பெருமாள்சாமி ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு சரக்கு ஆட்டோவில் வந்தனர். அந்த ஆட்டோவில் அவர்கள் காய்கறிகள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த காய்கறிகளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் வழங்கி காய்கறிகளை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து விவசாயி சீனிராஜ் கூறியதாவது:-
விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விலைக்கும், சந்தையில் மக்களிடம் விற்பனை செய்யும் விலைக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இந்த சூழ்நிலையில் அதிக லாபம் வைத்து சில இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதை அறிந்து வேதனை அடைகிறோம். ஏழை, எளிய மக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, எங்கள் கிராம விவசாயிகள் சார்பில் தக்காளி, முருங்கைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் ஆகிய காய்கறிகள் சுமார் 400 கிலோ தற்போது இலவசமாக வழங்கி உள்ளோம். தேவைப்பட்டால் மேலும் காய்கறிகளை இலவசமாக வழங்க உள்ளோம். இந்த காய்கறிகள் கலெக்டர் அலுவலகம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். இதுபோல், மற்ற கிராம விவசாயிகளும் தங்களால் இயன்ற காய்கறிகளை கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக வழங்கினால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story