கோவையில் பரபரப்பு: 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; சிறுவர்கள் உள்பட 7 பேர் போக்சோவில் கைது
கோவையில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவர்கள் உள்பட 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை,
கோவையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வயிற்றுவலி காரணமாக கடந்த 11-ம் தேதி தனது தாயாருடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளை செய்தனர். அதில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு மாணவி மற்றும் அவரின் தாயார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அந்த மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக அந்த மாணவி மற்றும் அவரின் தாயார் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மாணவி காணாமல் போனதாலும், அவர் கர்ப்பமாக இருப்பதாலும் இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவி மற்றும் அவரின் தாயாரை தேடி வந்தனர். அப்போது மாணவி தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதில், மாணவியை காதலிப்பதாக கூறி நட்புடன் பழகி மிரட்டி 17 வயது சிறுவர்கள் உள்பட 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் மாணவி கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அதில் மாணவியிடம் நட்பாக பழகி அவரை பாலியல் பலாத்காரம் செய்தது கோவையைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), தனசேகர் (24), சந்தோஷ் (19) மற்றும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் சிறுவர்கள் 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் சிறுவர்கள் 4 பேர் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மீதமுள்ளவர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமான சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story