திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா


திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 April 2020 1:45 PM IST (Updated: 14 April 2020 1:45 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர்,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 பேராக உயர்ந்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நேற்று அறிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 3 பேரும் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2 பேர் பெண்கள் ஆவர். மற்றொருவர் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர். அவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நெய்வாசல் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

அந்த கடையின் உரிமையாளர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடை உரிமையாளரை தொடர்ந்து 30 வயது வாலிபருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வாலிபர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கூத்தாநல்லூரில் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளை தாசில்தார் தெய்வநாயகி, நகராட்சி ஆணையர் லதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் அங்கு தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் நகர பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே நாகை மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 5 பேரும் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story