ஊரடங்கின் போது அதிக விலைக்கு விற்பனை: மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் - கலெக்டர் அருண் எச்சரிக்கை
ஊரடங்கின்போது அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்க உடந்தையாக இருந்த மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுவையில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 3 பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1,984 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி ஊர் சுற்றி வந்தவர்களிடம் இருந்து 12,091 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தட்டாஞ்சாவடி, கூனிச்சம்பட்டு, மதகடிப்பட்டு, கரையாம்புத்தூர், கன்னியக்கோவில் மற்றும் மடுகரை பகுதிகளில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் நேற்று வழக்கம்போல் இயங்கின. பழைய பஸ் நிலையம் மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள உழவர் சந்தைகளுக்கு மொத்தம் 18 மெட்ரிக் டன் காய்கறிகள் நேற்று விற்பனைக்கு வந்தது. டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் சுமார் 1336.47 குவிண்டால் கையிருப்பில் உள்ளது. 50 கிலோ வீதம் 2,224 மூட்டைகள் கால்நடை தீவனம் கையிருப்பில் உள்ளது.
புதுவையில் அனைத்து சில்லரை மதுபான கடைகள், மொத்த விற்பனை குடோன்கள் மற்றும் வடிசாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காலத்தில் சட்ட விரோத மது விற்பனை ஏதும் இருப்பின் அதை ஆய்வு செய்ய மொத்த விற்பனை குடோன்கள், பார்கள், சில்லரை மதுபான கடைகளில் கையிருப்பை ஆய்வு செய்ய வேண்டும்.
எனவே இருப்பு நிலையை ஆராய்ந்து சரிபார்க்க வேண்டும். இதற்காக விற்பனையாளர்கள் குடோன்கள், பார்கள், வடிசாலைகள் ஆகியவற்றில் கைவசம் உள்ள கையிருப்பு பதிவேட்டினை பெற வேண்டும். கலால் துறை மற்றும் போலீசார் இணைந்து நாளைக்குள் (புதன்கிழமை) நேரடி கையிருப்பை ஆய்வு செய்ய வேண்டும். இதில் ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய மது பான கடைகளின் உரிமையாளர்கள் உடந்தையாக இருந்து இருப்பது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். வடிசாலைகளில் பணி செய்ய அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்தால் அவர்கள் உடனடியாக மாற்றப்படுவார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story