ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி
புதுச்சேரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகளும் மற்றும் அனைத்து சிறுவழி பாதைகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகள், கிராமப் புறங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் மர்ம ஆசாமி ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த அந்த நபர் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் எந்திரத்தில் பணம் வைத்துள்ள அறையை திறக்க முடியவில்லை. அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதை கண்காணித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகடை போலீசுக்கு அந்த வங்கியின் உதவி பொது மேலாளர் அமுதா புகார் அளித்தார். உடனே பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம் மையத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த கொள்ளை முயற்சி குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story