தமிழ் புத்தாண்டில் வெறிச்சோடிய கோவில்கள் - வீடுகளில் மக்கள் பூஜை செய்தனர்


தமிழ் புத்தாண்டில் வெறிச்சோடிய கோவில்கள் - வீடுகளில் மக்கள் பூஜை செய்தனர்
x
தினத்தந்தி 15 April 2020 4:00 AM IST (Updated: 15 April 2020 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ் புத்தாண்டு தினத்தில் கோவில்கள் வெறிச் சோடின. இதனால் மக்கள் வீடுகளில் பூஜை நடத்தி விசு கனி தரிசனம் செய்தார்கள்.

நெல்லை,

சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பூஜைகள் மட்டுமே நடந்தன. தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் கூட்டமின்றி கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நெல்லையப்பர் கோவில்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும், கைலாச பருவதமாகிய, பத்துதலை ராவணேசுவரன், தாங்கி நிற்கும் சோமஸ்கந்தர் சன்னதிக்கு எழுந்தருளினார்கள்.

அவர்களுக்கு எதிரே தரையில் அகஸ்தியரும், குங்கிலிநாயனாரும், தாமிரபரணியும் எழுந்தருளினார்கள். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் தமிழ் புத்தாண்டையொட்டி, புதிய வருடத்துக்கான பஞ்சாங்கத்தை கோவில் தீட்சிதர் வாசித்தார். சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் வரவில்லை.

கோபுர தரிசனம்

இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணியசுவாமி, ராஜகோபாலசுவாமி கோவில், சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இதனால் கோவில் முன்பு நின்று பக்தர்கள் கோபுரங்களை பார்த்து தரிசனம் செய்தனர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால் தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து நெல்லையப்பர் கோவில் கோபுரத்தை வழிபட்டனர்.

வீட்டில் பூஜை

ஊரடங்கையொட்டி மக்கள் கோவில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி அனைத்து வகையான பழங்களையும் வைத்து சாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். சில வீடுகளில் விசு கனி காணுதல் என்ற பழங்களை வைத்து கண்ணாடியில் பார்த்து வழிபட்டனர். அப்போது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மற்றவர்கள் பணம் வாங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இதையொட்டி வீட்டில் சாமி கும்பிடுவதற்காக நெல்லை சந்திப்பில் உள்ள பலசரக்கு கடைகளில் அவல், பொறி, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். முககவசம் அணிந்து இருக்கவேண்டும் என்று போலீசார் கூறியதால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர்.

Next Story