தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வெறிச்சோடியது


தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 15 April 2020 3:45 AM IST (Updated: 15 April 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வெறிச்சோடியது.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரம், தமிழ் புத்தாண்டு அன்று சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டி இருக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழ் புத்தாண்டான நேற்று பயணிகள் இல்லாமல் மாமல்லபுரம் நகரம் வெறிச்சோடியது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சின்னங்களும் வெறிச்சோடி களையிழந்து காணப்பட்டது. சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து தெருக்களும் வெறிச்சோடின.

சுற்றுலா வாகனங்களின் அணிவகுப்பால் நெரிசலோடு காணப்படும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையும் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.

இங்குள்ள அனைத்து சிற்ப கூடங்களும் தொடர்ச்சியாக 3 வாரமாக மூடப்பட்டதால் சிற்பகூடங்கள் அதிகமாக உள்ள ஐந்து ரதம் சாலை, அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உளி சத்தம் கேட்காமல் ஒரு அமைதியான சூழல் நிலவியது. சுற்றுலா வழிகாட்டிகளும் தமிழ் புத்தாண்டு அன்று குவியும் சுற்றுலா பயணிகள் மூலம் நல்ல வருமானம் சம்பாதிப்பர். 

இந்த ஆண்டு அவர்களுக்கு ஒரு சோகமான தமிழ் புத்தாண்டாக அமைந்தது. மொத்தத்தில் தமிழ் புத்தாண்டான நேற்று மாமல்லபுரம் தன்னுடைய தனித்தன்மையை இழந்து பரிதாப நிலையில் காணப்பட்டது.

Next Story