ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்


ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 15 April 2020 4:00 AM IST (Updated: 15 April 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி கூறினார்.

காஞ்சீபுரம், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி எடுத்து வருகிறார்.

அதன்படி, ஆளில்லா குட்டி விமானம் மூலம் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து நகரின் முக்கிய வீதிகள் கண்காணிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும்போது இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. தேவை இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் இனிமேல் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே வரும் நபர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு திரும்ப தரமாட்டாது என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 4 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story