தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு - வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு, வேலைக்கார பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
திருநின்றவூர் பிரகாஷ் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், வீட்டில் தனியாக இருந்த தனது பெற்றோரை கவனித்து கொள்வதற்காக தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி மூலம், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா என்ற பெண்ணை கடந்த 2-ந் தேதிமுதல் வீட்டு வேலைக்காக வைத்திருந்தார்.
இந்த நிலையில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்த அந்த பெண், 6-ந்தேதி முதல் வேலைக்கு வரவில்லை. இதற்கிடையில் முருகேசன், வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 9 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேலைக்கார பெண் வனிதாவும் வேலைக்கு வராததால் அவர் மீது சந்தேகமடைந்த முருகேசன், இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் வீட்டில் வேலைசெய்து வந்த வேலைக்கார பெண் வனிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை திருவான்மியூரில் உறவினர் வீட்டில் இருந்த வனிதாவை திருநின்றவூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்குன்றம் அடுத்த வடகரை பகுதியை சேர்ந்த டைமண்ட் ஜோசப் (43) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story