சென்னையில் இருந்து மலேசியா செல்ல இருந்த சிறப்பு விமானம் ரத்து - பயணிகள் ஏமாற்றம்


சென்னையில் இருந்து மலேசியா செல்ல இருந்த சிறப்பு விமானம் ரத்து - பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 15 April 2020 4:05 AM IST (Updated: 15 April 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு விமானத்தில் மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணிகள், விமானம் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பரிதவித்த வெளிநாட்டு பயணிகள் அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகள் ஏற்பாட்டின்படி மத்திய அரசின் அனுமதி பெற்று சிறப்பு விமானங்களில் தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இதுவரை சென்னையில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் தங்கி உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று காலை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட இருப்பதாக மலேசிய பயணிகளுக்கு மலேசிய தூதரக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்ய 98 பயணிகள் மதுரை, சேலம், திருச்சி, மயிலாடுதுறை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று கார்களில் சென்னை வந்தனர். ஆனால் மலேசிய பயணிகளை அழைத்துச் செல்ல மலேசியாவில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் வரவில்லை என்றும், இதனால் சிறப்பு விமானம் இயக்கப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் மலேசியாவுக்கு செல்ல உள்ளோம் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகள், தங்களது பயணம் ரத்து என்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் விமான நிலையத்தில் தங்களுக்கு உணவு, குடிநீர் வசதி எதுவும் இல்லை. கழிவறைகளிலும் தண்ணீர் வசதி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். தங்களை மலேசியாவுக்கு சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னையில் தங்க வைக்கப்பட்டு, சிறப்பு விமானம் வந்ததும் அதில் ஏற்றி மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story