பிரதமர் மோடி உரையில் ஏழைகள் பிரச்சினைகளுக்கு வழிகாணப்படவில்லை - சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தாக்கு
பிரதமர் மோடி உரையில் ஏழைகள் பிரச்சினைகளுக்கு வழிகாணப்படவில்லை என சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
மும்பை,
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் மனிஷா கயாண்டே கூறுகையில், “பொதுவாகவே பிரதமர் மோடியின் உரையில் பொருளை விட சொல்லாடல் தான் அதிகம் இருக்கிறது. தனித்தனியாக இல்லாமல் புதிய வழிகாட்டுதல்களுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதன்கிழமையே பிரதமர் மோடி அறிவித்து இருக்கலாம்.
நல்லவேளையாக பிரதமர் மக்களை பாத்திரங்களை தட்டும்படியோ அல்லது விளக்குகளை ஏற்றும்படியோ கூறவில்லை. பிரதமரின் உரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள அறிவிப்பை தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் தெரிவிக்கையில், “பிரதமர் மோடி ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள ஏழைகளுக்கு உதவுவது பற்றி பேசினார். ஆனால் ஏழைகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு சார்பாக நிவாரண தொகுப்பை அறிவித்து இருக்கலாம். இதன் மூலம் ஏழைகள் பிரச்சினைகளுக்கு வழிகாணப்படவில்லை” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், “நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார பிரச்சினைகளை பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் காலத்தில் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை எவ்வாறு கையாளப்படும் என்பதை முதலாளிகளும், ஊழியர்களும் அரசாங்கத்திடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்” என்றார்.
Related Tags :
Next Story