பெங்களூரு கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரி மருத்துவ பணியாளர்களுக்கு 400 கவச உடைகள் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் வழங்கினார்
பெங்களூரு கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரி மருத்துவ பணியாளர்களுக்கு 400 கவச உடைகளை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் வழங்கினார்.
பெங்களூரு,
பெங்களூரு மல்லேசுவரத்தில் கே.சி.ஜெனரல் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது டாக்டர்களுக்கு தேவையான 400 கவச உடைகளை அவர் வழங்கினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் கொரோனா மட்டுமின்றி பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிற நோயாளிகளுக்கும் அந்த வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் பிற நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.
கவச உடைகள்
காய்ச்சல் மருத்துவ மையங்களையும் தனி வார்டில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். காய்ச்சல், சளி உள்ளிட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா நோயாளிகள், அறிகுறி உள்ளவர்களை தனி கட்டிடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
டைட்டான், எஸ்.வி.பி. இன்டியா மற்றும் பி பேக் ஆகிய நிறுவனங்கள் 400 கவச உடைகளை (பி.பி.இ.) வழங்கின. அவற்றை இந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கியுள்ளோம். அரசு சார்பிலும் இத்தகைய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். இந்த நோக்கத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story