தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரத்தை, தங்களுக்கு வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய மின்சாரத்தை தங்களுக்கு வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
பெங்களூரு,
விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களுருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் மின்சார பயன்பாடு குறைந்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய அந்த மின்சாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். சோளம் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதே போல் ராகி கொள்முதல் நிலையங்களை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும். அதே போல் துவரை, கடலைக்காய் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படுகின்றன.
விவசாய பணிகளுக்கு விலக்கு
நான் இதுவரை 22 மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். பெரும்பாலான இடங்களில் தக்காளி, பழங்களை விற்பனை செய்வதில் பிரச்சினை இருக்கிறது. இதனால் அந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாப்காம்ஸ் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு ஆகும் செலவை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் இல்லாததால் பூக்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பூக்கள் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த அதிகரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திராட்சை பாதிப்பை தடுக்க ஒயின் உற்பத்தி மையங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சமூக விலகலை பின்பற்றி பணிகளை செய்ய வேண்டும். உரத்தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story