தஞ்சை, நாகை மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மகன், மருமகள், பேத்திக்கும் பரவியது
தஞ்சை, நாகை மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மகன், மருமகள், பேத்திக்கும் பரவியது.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தை சேர்ந்த 4 பேருக்கும், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 2 பேருக்கும், மேலத்திருப்பூந்துருத்தி, அம்மாப்பேட்டை, தஞ்சையை சேர்ந்த தலா ஒருவருக்கும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒரத்தநாட்டை சேர்ந்த ஒருவரை சந்தித்த திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அம்மாப்பேட்டையை சேர்ந்தவரின் 28 வயதான மகன், 21 வயதான மருமகள், பேத்தியான 8 மாத பெண் குழந்தைக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டது.
இதே போல் அதிராம்பட்டினத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருடைய தந்தை டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர் ஆவார். அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
அதிராம்பட்டினம் மற்றும் அம்மாப்பேட்டையில் அவர்கள் வசிக்கும் பகுதிகள் ஏற்கனவே ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகளில் உள்ள தெரு வாயில்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து மூடி உள்ளனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கும், வெளிப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்குள் செல்லாதவாறும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், பொரவச்சேரி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 29 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டம் சிகப்பு வளையத்திற்குள் வந்தது. இந்நிலையில் திட்டச்சேரியை அடுத்த காரையூர் வீரபோகம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை முதலாவது கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story