கடலூர் அருகே, போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி சாவு - 4 பேருக்கு தீவிர சிகிச்சை


கடலூர் அருகே, போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி சாவு - 4 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 April 2020 1:47 PM IST (Updated: 15 April 2020 1:47 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரங்கிப்பேட்டை, 

கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன்(50), ராமர் மகன் எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 5 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மது குடிக்க முடியாமல் 5 பேரும் தவித்தனர். இதற்கிடையில் எங்காவது மது கிடைக்குமா என்று பல்வேறு இடங்களில் விசாரித்தனர்.

நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் வைத்து போதைக்காக ஒரு திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நேரம் செல்ல, செல்ல வயிற்று வலி அதிகமானதால் சந்திரகாசி அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சந்திரகாசியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்திரகாசி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில், ஆணையம்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமரேசன்(26) என்பவர் கடலூர் சிப்காட் வளாகத்தில் பூச்சிக்கொல்லி தயார் செய்து வரும் ஒரு தனியார் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு ஆலையில் இருந்து ஒரு பாட்டிலில், சுமார் ஒரு லிட்டர் அளவுள்ள மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். அங்கு போதை வஸ்துவாக பயன்படுத்தும் நோக்கில் அதில் தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் குடித்துள்ளார். இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு சந்திரகாசி உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே மெத்தனால் திரவம் வெளியே கொண்டு செல்லும் வகையில் அஜாக்கி ரதையாக செயல்பட்ட, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்குமாறு கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இரவு, கலால் உதவி ஆணையர் விஜயராகவன், கடலூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் ஆகியோர் கொண்ட குழுவினர் சிப்காட்டுக்கு சென்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story