மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் முனியநாதன், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்காக சிறப்பு அதிகாரிகள் 2 பேரும் வந்தனர்.
இதையொட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிறப்பு அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.
அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தது குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தனர். மேலும் இனிமேல் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை பற்றி விளக்கினர். அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
அதேபோல் விவசாயிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கும், இதர தொழிலாளர்களுக்கும் உரிய காலத்தில் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பழனி சப்-கலெக்டர் உமா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story