வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் குழப்பம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி புதுவையிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மீண்டும் 3-ந்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவினை அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்து உள்ளார். வருகிற 20-ந் தேதி வரை ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார். அதன்பின் எந்தெந்த துறைகளை செயல்பட அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவிக்கும் என்று கூறியுள்ளார்.
புதுவையில் உள்ள தொழிலதிபர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு உறுதி அளித்துள்ளனர். குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிப்பது, ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது போன்றவற்றுக்கு தயாராக இருப்பதாக கூறினார்கள். இந்த காலகட்டத்தில் வயது முதிர்ந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கடினமான சூழ்நிலை ஏற்படும். சமூக விலகலை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். எனவே வருகிற 20-ந் தேதி வரை புதுவையில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும். அதன்பின்பு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. எங்களிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழக பஸ்களில் அரிசியை கொண்டு சென்று வினியோகிக்கின்றனர். இப்படி வினியோகிக்க பல நாட்களாகும்.
எனவே இது தொடர்பாக தலைமை செயலாளர், கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேசி உள்ளோம். ஒரு வாரத்துக்குள் அனைவருக்கும் அரிசியை வினியோகிக்க கூறியுள்ளோம். லாரிகளை வைத்து அரிசியை எடுத்துச் சென்று பரவலாக அனைத்து தொகுதிகளிலும் கொடுக்க கூறியுள்ளோம். இந்த நேரத்தில் அதிகாரிகள் வேகமாக செயல்பட வேண்டும். மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதத்திற்கான அரிசி போட நடவடிக்கை எடுக்கிறோம். விரைவில் செயல்படுத்தப்படும்.
நமது மாநிலத்தில் 25 சதவீத மக்கள் வெளியில் வரும்போது முக கவசம் அணியாமல் செல்கின்றனர். வெளியில் வரும்போது கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். மாகி பிராந்தியத்தை ஒட்டியுள்ள கேரள பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மாகியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அரியாங்குப்பம் சொர்ணா நகர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் முடிந்து விட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் விதிகளை தளர்த்தி சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே சொர்ணா நகரில் விதிமுறைகள் தளர்த்தப்படும்.
புதுவையில் 6 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மே மாதம் 3-ந் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமரிடம் ரூ.995 கோடி நிதி கேட்டு உள்ளேன். மத்திய அரசு உதவ வேண்டிய காலமிது. எனவே நிதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story