மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா: புளியங்குடியில் அனைத்து தெருக்களும் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு


மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா: புளியங்குடியில் அனைத்து தெருக்களும் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 4:15 AM IST (Updated: 16 April 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து தெருக்களையும் மூடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஏற்கனவே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த 72 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நகரசபை ஊழியர்கள், வருவாய் துறையினர், போலீசார் அந்த தெரு மற்றும் அந்த தெருவை சுற்றியுள்ள அனைத்து தெருக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள், அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் 26 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிக்கப்பட்ட முதியவரின் 2 மகள்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த தெருவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என 49 பேரின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் ஒருவருக்கு கொரோனா

இதில் நேற்று அதே தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புளியங்குடியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீசாரின் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புளியங்குடி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு அனைத்து தெருக்களும் கட்டைகள் மற்றும் தகர சீட்டுகள் கொண்டு மூடப்பட்டு உள்ளன.

புளியங்குடி நகர எல்லைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நகரசபை ஊழியர்கள் போலீசாருடன் இணைந்து அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆலோசனை

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தாசில்தார் அழகப்பராஜா மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார், நகரசபை ஆணையாளர் குமார் சிங், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


Next Story