“வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது” - துணை போலீஸ் கமிஷனர் சரவணன் பேட்டி


“வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது” - துணை போலீஸ் கமிஷனர் சரவணன் பேட்டி
x
தினத்தந்தி 15 April 2020 10:30 PM GMT (Updated: 15 April 2020 7:44 PM GMT)

“வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது” என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் கூறினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்க்கும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்வதற்காக 94428 66999 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் எந்த உதவி கேட்டாலும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இந்த எண்ணை நேற்று பொது இடங்களில் போலீசார் வைத்தனர். இதை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள், ஓட்டல், சில்லறை விற்பனை, நடமாடும் வியாபாரிகள், அழகு நிலையங்கள், லாரி டிரைவர்கள் என அனைவரும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் பேர் உள்ளனர். மாநகர எல்லையில் மட்டும் சுமார் 1000 பேர் உள்ளனர்.

அவர்கள் வசதிக்காக உதவி எண், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு இந்தி தெரிந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் சுமார் 100 அழைப்புகள் பெறப்பட்டு 1800 பேர் உதவி பெற்றுள்ளனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் ஆலோசனையின் பேரில் வெளிமாநில தொழிலாளர் வசதிக்காக மாநகரின் முக்கிய இடங்களில் ஹெல்ப்லைன் நம்பர் 94428 66999 குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி கமிஷனர் சதீஷ்குமார் உடனிருந்தார்.

Next Story